தஞ்சையில் சோகம்: குளத்தில் மூழ்கிய 2 மகள்களை காப்பாற்றிய தாய் நீரில் மூழ்கி பலி...!


தஞ்சையில் சோகம்: குளத்தில் மூழ்கிய 2 மகள்களை காப்பாற்றிய தாய் நீரில் மூழ்கி பலி...!
x
தினத்தந்தி 17 May 2022 10:00 AM GMT (Updated: 17 May 2022 10:00 AM GMT)

தஞ்சை அருகே குளத்தில் மூழ்கிய 2 மகள்களை காப்பாற்றிய தாய் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிராம்பட்டினம், 

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள வாழைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சன்ட் (வயது 54) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஸ்டெல்லா (47). இந்த தம்பதிகளுக்கு பெனினாள்(19), வின்சி (21) என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலையில் ஸ்டெல்லா அதே பகுதியில் உள்ள வண்ணான் குளத்திற்கு தன்னுடைய இரு மகள்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது கரையில் நின்று குளித்துக் கொண்டிருக்கும் பொழுது இளையமகள் பெனினால் தண்ணீரில் திடீரென மூழ்கினார். 

இதனை அடுத்து மூத்த மகள் வின்சி நீரில் மூழ்கிய தங்கையை காப்பாற்ற முயன்ற வேளையில் அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதனால் செய்வதறியாது திகைத்த ஸ்டெல்லா பதறிப்போய் தண்ணீரில் குதித்து மகள்கள் இருவரையும் கரைப்பகுதிக்கு தள்ளிவிட்ட நிலையில் ஸ்டெல்லா தண்ணீரில் தத்தளித்தார். 

இதனையடுத்து இவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் வந்து மகள்கள் இருவரையும் காப்பாற்றினர்.

பின்னர், தண்ணீரில் மூழ்கிய நிலையில் கைகள் மட்டும் வெளியில் தெரிந்த நிலையில் கிடந்த ஸ்டெல்லாவை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். 

இதனை அடுத்து அதிராம்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இரு மகள்களை காப்பாற்றிவிட்டு தன்னுடைய உயிரை தாய் நீத்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி இளையமகள் பெனினால் கூறியதாவது:

நான் எனது அக்கா அம்மா மூவரும் வண்ணான் குளத்திற்கு குளிக்க சென்றோம் அப்பொழுது நான் குளிக்கும்பொழுது சேற்றுப் பகுதியில் சிக்கிவிட்டேன் மேலே வர முடியாமல் தத்தளித்த என்னை பார்த்து எழுத அக்கா காப்பாற்ற முயன்ற போது எங்க அக்காவும் தண்ணீரில் தத்தளித்த உடனே என் அம்மா எங்களை கைகளை இழுத்து கொண்டு தரைப்பகுதிக்கு தள்ளிவிட்டு எனது அம்மா நீரில் மூழ்கினார்.

அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டு விட்டு மயங்கி கீழே விழுந்து விட்டேன் கண் விழித்துப் பார்த்தபொழுது அம்மாவுக்கு மூச்சு பேச்சில்லாமல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர் இறந்து விட்டதாக கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். எங்களை காப்பாற்றி விட்டு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். என்று சோகத்துடன் கூறினார்.


Next Story