2023 கேலோ இந்தியா போட்டிகள்: முதல் அமைச்சரின் கோரிக்கையை ஏற்ற பிரதமர் மோடி
2023 கேலோ இந்தியா போட்டிகள் தமிழகத்தில் நடத்த ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
2023 கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். இதனை தொடர்ந்து , முதல் அமைச்சரின் கோரிக்கையை ஏற்று கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டரில் பதிவிடுள்ளார்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டரில் கூறி இருப்பதாவது; "நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கான எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக, பிரதமர் மோடிக்கு எனது நன்றிகள்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரும் இளம் விளையாட்டு வீரர்களும், தங்கள் விளையாட்டு திறன்களை வெளிப்படுத்த இந்த விளையாட்டுகள் ஒரு தளமாக செயல்படும். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது அனைவரும் கண்டது போல், தமிழ்நாடு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளையும் தகுந்த கம்பீரத்துடன் நடத்தி, தமிழ் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்தும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.