தமிழகத்தில் 2,093 பேருக்கு கொரோனா: கோவையை சேர்ந்த முதியவர் உயிரிழப்பு
தமிழகத்தில் நேற்று 2 ஆயிரத்து 93 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
நேற்று புதிதாக 33 ஆயிரத்து 899 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 1,232 பேரும், பெண்கள் 861 பேரும் உள்பட 2 ஆயிரத்து 93 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 516 பேர், செங்கல்பட்டில் 269 பேர், கோவையில் 178 பேர், திருவள்ளூரில் 104 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 84 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 339 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
உயிரிழப்பு
தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் கோவை மாவட்டத்தை சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்ற மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 31 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 16 ஆயிரத்து 504 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 5 ஆயிரத்து 519 பேரும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 182 பேரும், கோவையில் 1,173 பேரும் திருவள்ளூரில் 678 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் 803 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 290 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 71 ஆயிரத்து 816 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.