மாவட்டத்தில் 21 லட்சம் வாக்காளர்கள்


மாவட்டத்தில் 21 லட்சம் வாக்காளர்கள்
x
தினத்தந்தி 27 Oct 2023 6:45 PM GMT (Updated: 27 Oct 2023 6:45 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். அதில் 21 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர்.

கடலூர்

கலெக்டர் வெளியிட்டார்

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை முதன்மை தேர்தல் அலுவலர் ஆகியோரது அறிவுரைகளின்படி 1.1.2024-யை தகுதி நாளாக கொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தனது அலுவலக கூட்டரங்கில் வெளியிட்டார்.

இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 20 லட்சத்து 91 ஆயிரத்து 294 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10 லட்சத்து 31 ஆயிரத்து 930 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 59 ஆயிரத்து 100 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.

சிறப்பு முகாம்கள்

இதையடுத்து முதற்கட்டமாக 4.11.2023 (சனிக்கிழமை) 5.11.2023 (ஞாயிற்றுக்கிழமை), மற்றும் 18.11.2023 (சனிக்கிழமை) 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்களில் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களது வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள உரிய படிவங்களை நேரடியாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளிக்கலாம்.

மேலும் http://www.nvsp.in/, http://voterportel.eci.gov.in/ ஆகிய இணையதளங்கள் மற்றும் 'voters helpline" செல்போன் செயலி மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள், ஆதார் எண் இணைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

முதல் தலைமுறை வாக்காளர்கள்

ஆகவே பொதுமக்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களது வாக்காளர் விவரங்களை சரிபார்த்துக் கொள்வதுடன் தங்களது குடும்பத்தில் 18-வயது நிறைவடையும் முதல் தலைமுறை வாக்காளர்களை இணைத்திடுவதன் மூலம் நமது கடலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் அனைத்து வாக்காளர்களும் அடங்கிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட ஒத்துழைக்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், தேர்தல் தாசில்தார் மணிவண்ணன், துணை தாசில்தார் சிவகுமார், தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, அ.தி.மு.க. ஸ்ரீநாத், பா.ஜ.க. செல்வகணபதி, தே.மு.தி.க. நகர செயலாளர் சரவணன், காங்கிரஸ் திலகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாதவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், பகுஜன் சமாஜ் கட்சி சுரேஷ், ஆம் ஆத்மி தேவகுமார் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


Next Story
  • chat