லாரியில் இருந்த 2,160 மதுபாட்டில்கள் கொள்ளை


லாரியில் இருந்த 2,160 மதுபாட்டில்கள் கொள்ளை
x

உளுந்தூர்பேட்டை அருகே டீ குடிப்பதற்காக டிரைவர் நிறுத்தியபோது லாரியில் இருந்த 2,160 மதுபாட்டில்களை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சூரியகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமணி(வயது 45). இவர் தனக்கு சொந்தமான லாரி மூலம் ஒப்பந்த முறையில் டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றி பிற டாஸ்மாக் குடோன்களுக்கு கொண்டு சென்று வருகிறார்.

அதன்படி முத்துமணி, மன்னார்குடியில் உள்ள குடோனில் இருந்து 770 மதுபான பெட்டிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர், கடலூர், கள்ளக்குறிச்சி வழியாக வேலூருக்கு புறப்பட்டார்.

தார்பாயை கிழித்து கொள்ளை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூரில் உள்ள ஒரு கடை முன்பு லாரியை நிறுத்தி, முத்துமணி டீ குடித்தார். பின்னர் அங்கிருந்து வேலூர் நோக்கி புறப்பட்டார். திருவண்ணாமலை அருகே காட்டுகோவில் பகுதியில் சென்றபோது, இயற்கை உபாதை கழிப்பதற்காக லாரியை முத்துமணி நிறுத்தினார். அப்போது லாரியின் மேல் போர்த்தப்பட்டிருந்த தார்பாய் கிழிந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துமணி, லாரியை வேலூர் டாஸ்மாக் குடோனுக்கு ஓட்டிச் சென்று மதுபான பெட்டிகளை எண்ணினார். அப்போது அதில் 45 பெட்டிகள் குறைவாக இருந்தது. வரும் வழியில் டீ குடிப்பதற்காக லாரியை நிறுத்தி இருந்தபோது மர்மநபர்கள் தார்பாயை கிழித்து மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

7 பேர் கொண்ட கும்பல்

இது குறித்து முத்துமணி எலவனாசூர்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் லாரி வந்த வழித்தடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் 7 பேர் கொண்ட கும்பல் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

விசாரணையில், மன்னார்குடியில் உள்ள குடோனில் இருந்து மதுபாட்டில்களை லாரியில் முத்துமணி ஏற்றிச்செல்வதை நோட்டமிட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த விஜயன் (வயது 37), விக்கிரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் (35) உள்பட 7 பேர், ஆம்னி வேனில் பின்தொடர்ந்தனர்.

2 பேர் கைது

எறையூரில் லாரியை முத்துமணி நிறுத்தியபோது, 7 பேரும் தார்பாயை கிழித்து 45 பெட்டியில் இருந்த 2160 மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

இதையடுத்து விஜயன்(37), மணிகண்டன் (35) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்களுடன் தலைமறைவான மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story