எடப்பாடி அருகே காப்பக வேன் கவிழ்ந்து 22 மாணவிகள் காயம்
எடப்பாடி அருகே காப்பக வேன் கவிழ்ந்த விபத்தில் 22 மாணவிகள் காயமடைந்தனர்.
எடப்பாடி,
தனியார் காப்பகம்
எடப்பாடி அருகே வெள்ளரி வெள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, சின்ன முத்தூர் பகுதியில் ஒரு தனியார் அறக்கட்டளை அமைப்பின் கீழ் பெண் குழந்தைகளுக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் செயல்பட்டு வரும் இக்காப்பகத்தில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகளில் பயிலும், 52 மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
அவர்கள் தினமும் காப்பகத்திற்கு சொந்தமான வேனில் எடப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு அரசு பள்ளிகளுக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர்.
வேன் கவிழ்ந்தது
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி சென்று திரும்பிய மாணவிகளை ஏற்றிக் கொண்டு காப்பகத்துக்கு சொந்தமான வேன் சின்ன முத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. வேனில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் இருந்ததாக தெரிகிறது. ேவனை எடப்பாடி அடுத்த கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் ஆனந்தராஜ் (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சின்னமுத்தூர் அருகே பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காப்பகத்தை சேர்ந்த மாணவிகள் மோனிஷா (17), பவித்திரா (14), வர்ஷியா (12), அபிஷா (13), புனித வள்ளி (17), ரோகிணி (15),் இனியா (10) உள்பட 22 பேர் காயம் அடைந்தனர். மேலும் டிரைவர் ஆனந்தராஜூக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை
விபத்தில் காயம் அடைந்த மாணவிகளை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் உமா மகேஸ்வரி நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டு அறிந்தார். இந்த விபத்து குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.