பிளஸ்-1 பொதுத்தேர்வை 22,727 மாணவர்கள் எழுதினர்


பிளஸ்-1 பொதுத்தேர்வை 22,727 மாணவர்கள் எழுதினர்
x
தினத்தந்தி 14 March 2023 6:45 PM GMT (Updated: 14 March 2023 6:45 PM GMT)

குமரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 22 ஆயிரத்து 727 மாணவ-மாணவிகள் எழுதினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 22 ஆயிரத்து 727 மாணவ-மாணவிகள் எழுதினர்.

பிளஸ்-1 தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 929 மாணவர்களும், 5 ஆயிரத்து 750 மாணவிகளும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதே போல மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 579 மாணவர்களும், 5 ஆயிரத்து 822 மாணவிகளும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து 1,342 தனித்தேர்வர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 23 ஆயிரத்து 422 மாணவ-மாணவிகள் தோ்வு எழுத நுழைவு சீட்டு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று தேர்வு எழுத 689 பேர் வரவில்லை. மேலும் 6 பேர் மொழிப்பாடம் எழுத விலக்கு பெற்று இருந்தனர். இதைத் தொடர்ந்து 22 ஆயிரத்து 727 பேர் தேர்வு எழுதினர்.

அறிவுரை

முன்னதாக தேர்வை எதிர்கொள்வது குறித்து மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். பின்னர் தேர்வு மையத்துக்கு சென்ற மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டு இருந்த தேர்வு அறை விவரத்தை தெரிந்து கொண்டு தேர்வு அறைக்கு சென்று தேர்வு எழுதினார்கள். பெரும்பாலான மாணவ-மாணவிகள் தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே தேர்வு மையத்துக்கு வந்து தாங்கள் படித்த பாடங்களை நினைவூட்டிக் கொண்டனர். தேர்வு தொடங்கிய பிறகு தேர்வு மையத்துக்குள் பிற நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு கண்காணிப்பு அதிகாரிகள் மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை கண்காணிக்க தேர்வு மையத்தில் நிலையான படையினர் 100 பேரும், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய பறக்கும் படை 100 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுத் தேர்வை கண்காணிக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பு அலுவலராக துணை இயக்குனர் நியமிக்கப்பட்டு உள்ளார். குமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பு அலுவலர், முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி திட்ட அலுவலர் ஆகியோர் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பறக்கும் படையினர் நேற்று தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.


Next Story