குமரியில் பிளஸ்-2 தேர்வை 22,832 பேர் எழுதினர்; தேர்வு மையத்தில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு


குமரியில் பிளஸ்-2 தேர்வை 22,832 பேர் எழுதினர்; தேர்வு மையத்தில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு
x
தினத்தந்தி 13 March 2023 6:45 PM GMT (Updated: 13 March 2023 6:46 PM GMT)

குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 22 ஆயிரத்து 832 மாணவ-மாணவிகள் எழுதினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 22 ஆயிரத்து 832 மாணவ-மாணவிகள் எழுதினர்.

பிளஸ்-2 தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 37 தேர்வு மையங்களும், 1 தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 123 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 866 மாணவர்களும், 5 ஆயிரத்து 497 மாணவிகளும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. இதே போல மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 45 தேர்வு மையங்களும், 1 தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டிருந்தது.

மொத்தம் மாவட்டம் முழுவதும் 23 ஆயிரத்து 392 மாணவ-மாணவிகள் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நேற்று 560 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதைத் தொடர்ந்து 22 ஆயிரத்து 832 பேர் தேர்வு எழுதினர்.

அறிவுரை

முன்னதாக தேர்வு எழுத சென்ற மாணவர்களை வீட்டில் பெற்றோர், தேர்வை நன்றாக எழுதும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். பெரும்பாலான மாணவ, மாணவிகள் தங்களது இஷ்ட தெய்வங்களை வணங்கி விட்டு தேர்வு மையத்துக்கு சென்றனர். அதோடு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் கூட்டாக சேர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளி வளாகத்தில் அமர்ந்தபடி பாடங்களை படித்து நினைவூட்டிக் கொண்டனர். பின்னர் பள்ளியில் ஒட்டப்பட்டு இருந்த தேர்வு அறை விவரத்தை தெரிந்து கொண்டு அந்த அறைக்கு சென்று தேர்வு எழுதினர். குமரி மாவட்டத்தில் மொத்தம் 86 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதினர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவியாக தேர்வு எழுத ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். எனவே மாற்றுத்திறனாளி மாணவர் சொல்ல சொல்ல தேர்வை அந்த நபர் எழுதினார்.

குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை கண்காணிக்க தேர்வு மையத்தில் நிலையான படையினர் 100 பேரும், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய பறக்கும் படை 100 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்வை கண்காணிக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் சிறப்பு அலுவலராக துணை இயக்குனர் நியமிக்கப்பட்டு உள்ளார். குமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பு அலுவலர், முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலர் ஆகியோர் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

இந்த பறக்கும் படையினர் நேற்று தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள தேர்வு மையத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். விடைத்தாள்கள் பெறப்பட்டு மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முதன்மை கல்வி அதிகாரிகள் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் தேர்வு நாளன்று தனி வாகனம் மூலம் தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்கள் 22 வழித்தடங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் பொதுத் தேர்வுக்கு அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி உடன் இருந்தார்.


Next Story