மாவட்டத்தில் 23 லட்சத்து 10 ஆயிரத்து 413 வாக்காளர்கள்


மாவட்டத்தில் 23 லட்சத்து 10 ஆயிரத்து 413 வாக்காளர்கள்
x

மாவட்டத்தில் 23 லட்சத்து 10 ஆயிரத்து 413 வாக்காளர்கள் உள்ளனர்.

திருச்சி

இறுதி வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இந்தாண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு திருச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2023-ம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற்றது. அதன் அடிப்படையில் தற்போது சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டார். அப்போது மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து கலெக்டர் பிரதீப்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிகம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். லால்குடி தொகுதியில் குறைவான வாக்காளர்கள் உள்ளனர். 2011 மக்கள் தொகை அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் உள்ள பாலினவிகிதம் 1,000 ஆண்களுக்கு 1,062 பெண்கள் உள்ளனர்.

தற்போது மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,544 ஆகும். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு படிவம் 6-ன் மூலம் புதிதாக 43 ஆயிரத்து 423 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்த மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்கள் படிவம் 7-ன் மூலம் 34 ஆயிரத்து 288 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

23,10,413 வாக்காளர்கள்

தற்போது திருச்சி மாவட்டத்தில் 11 லட்சத்து 20 ஆயிரத்து 158 ஆண் வாக்காளர்களும், 11 லட்சத்து 89 ஆயிரத்து 933 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலின வாக்காளர்கள் 322 பேரும் என மொத்தம் 23 லட்சத்து 10 ஆயிரத்து 413 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும், இந்திய ராணுவத்தில் பணிபுரியும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள் 9 சட்டமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 1,376 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலானது அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் தங்களது பெயர் மற்றும் விவரங்களை இறுதி வாக்காளர் பட்டியலில் சரிபார்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story