ரெயில்களில் அபாய சங்கிலியை இழுத்த 23 பேர் கைது


ரெயில்களில் அபாய சங்கிலியை இழுத்த 23 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2023 1:00 AM IST (Updated: 22 Jun 2023 3:18 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்களில் விதிமுறைகளை மீறி அபாய சங்கிலியை இழுத்த 23 பேர் மீது வழக்குப்பதிவு

சேலம்

சூரமங்கலம்:-

ரெயில்களில் விதிமுறைகளை மீறி அபாய சங்கிலியை இழுத்த 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

அபாய சங்கிலி

ரெயில்களில் அபாய சங்கிலி பயணிகளின் அவசர தேவைக்காக பயன்படுத்த பொருத்தப்பட்டுள்ளது. இந்த அபாய சங்கிலியை சிலர் தேவையில்லாமல் இழுத்து ரெயிலை நிறுத்தி விடுகின்றனர். இதனால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

இது போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில்களில் கண்காணித்து வருகின்றனர். மேலும் ரெயில்களில் தேவை இல்லாமல் அபாய சங்கிலியை இழுப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

23 பேர் கைது

அதன்படி சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 5 மாதங்களில் காரணமில்லாமலும், தேவையில்லாமல் அபாய சங்கிலியை விதிமுறைகளை மீறி இழுத்த 23 பேர் மீது ரெயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் 23 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறும் போது, ' ஓடும் ரெயிலில் அவசியமில்லாமல் அபாய சங்கிலியை இழுக்க கூடாது. சிலர் தேவையில்லாமல் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தி விடுகின்றனர். இதனால் ரெயில் இயக்கப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் தேவையில்லாமல் ரெயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரெயில்களை நடுவழியில் 23 பேர் நிறுத்தி உள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம். எனவே ரெயிலில் தேவையில்லாமல் பயணிகள் அபாய சங்கிலியை இழுக்காமல் ரெயில்வே துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என்றனர்.


Next Story