பைனான்சியர் வீட்டில் 23 பவுன் நகை, 3¼ கிலோ வெள்ளி கொள்ளை
கள்ளக்குறிச்சியில் பைனான்சியர் வீட்டில் 23 பவுன் நகைகள் மற்றும் 3¼ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என். நகரை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 52). பைனான்சியர். இவரது மகன் மோகனரங்கன். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து திருமணத்திற்காக புதிய துணிகள் வாங்க தீனதயாளன் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி சித்ரா, மகன் மோகனரங்கன் ஆகியோருடன் சென்னைக்கு சென்றார். இந்த நிலையில் தீனதயாளன் வீட்டுக்கு உறவினர் ஒருவர் சென்றார். அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை அவர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அளித்த தகவலின் பேரில் தீனதயாளன் சென்னையில் இருந்து வீட்டுக்கு விரைந்து வந்துபார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 23 பவுன் நகை மற்றும் 3¼ கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை.
ரூ.11½ லட்சம்
அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் தீனதயாளன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ரூ.11½ லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் இருந்த கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.