போக்குவரத்து விதிமீறிய 232 ஆம்னி பஸ்களுக்கு ரூ.7 லட்சம் அபராதம்
தொடர் விடுமுறையையொட்டி நடந்த சிறப்பு சோதனையில் போக்குவரத்து விதிமீறிய 232 ஆம்னி பஸ்களுக்கு ரூ.7 லட்சத்து 23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பு சோதனை
மிலாதுநபி, சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் காந்தி ஜெயந்திக்காக கடந்த மாதம் 29-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 4 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையொட்டி வெளியூர்களில் வசிக்கும் பலர் தங்கள் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு ரெயில், பஸ்களில் புறப்பட்டு சென்றனர். அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்து விட்டதால் பெரும்பாலானோர் பஸ்களில் குடும்பத்துடன் தங்கள் ஊருக்கு புறப்பட்டனர். இதனை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
அதன்பேரில் வேலூர் சரக இணை போக்குவரத்து கமிஷனர் நெல்லையப்பன் மேற்பார்வையில் கிருஷ்ணகிரி, ஓசூர், வாலாஜா, வாணியம்பாடி, பள்ளிகொண்டா ஆகிய சுங்கச்சாவடிகளின் அருகே சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், ராமலிங்கம், ராமகிருஷ்ணன், காளியப்பன், துரைசாமி ஆகியோரின் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், சிவக்குமார், ராஜேஷ்கண்ணா, அமர்நாத், விஜயகுமார், வெங்கட்ராகவன், கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படை இன்ஸ்பெக்டர் அன்புசெழியன், வேலூர் சரக வட்டார பறக்கும்படை போக்குவரத்து அலுவலர் பிரதீபா, பறக்கும்படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் ஆகியோர் கடந்த மாதம் 28-ந் தேதி இரவு முதல் 5 நாட்கள் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டனர்.
232 பஸ்களுக்கு அபராதம்
அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதா?, அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்களா?, டிரைவர் சீருடை அணிந்துள்ளாரா?, தகுதிச்சான்று புதுப்பிக்கப்பட்டுள்ளதா?, ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா?, முகப்பு விளக்கில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்பது உள்பட பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டனர். மேலும் சாலை வரி, பிறமாநில ஆம்னி பஸ்கள் தமிழக நுழைவு வரியை முறையாக செலுத்தி உள்ளார்களா என்றும் சோதனை செய்யப்பட்டது.
இந்த சிறப்பு சோதனையில் 1,022 ஆம்னி பஸ்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 232 பஸ்கள் போக்குவரத்து விதிகளை மீறியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ரூ.7 லட்சத்து 23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வாகன சாலை வரி ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 410 வசூலிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.