236 குடும்பத்திற்கு பட்டா வழங்க கோரிக்கை
236 குடும்பத்திற்கு பட்டா வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் கண்ணகி காலனியில் கடந்த 36 ஆண்டுகளாக 236 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி அங்கு குடியிருந்து வருபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் 20 குடும்பங்களை அந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் சிவகாசி மாநகர தி.மு.க. செயலாளர் உதயசூரியனை நேரில் சந்தித்து தங்களுக்கும் பட்டா வழங்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து தி.மு.க. மாநகர செயலாளர் உதயசூரியன், நிர்வாகிகள் ராஜேஷ், கருப்பசாமி, மாரீஸ்வரன், செந்தில் ஆகியோர் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் லோகநாதனை நேரில் சந்தித்து கண்ணகி காலனியில் வசித்து வரும் 236 பேருக்கும் பட்டா வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் லோகநாதன் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு விரைவில் பட்டா வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.