டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2முதன்மை தேர்வை 2,393 பேர் எழுதினர்
வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதன்மை தேர்வை 2,393 பேர் எழுதினார்கள். தேர்வர்களுக்கு வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதால் அவதிக்கு உள்ளாகினர்.
வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதன்மை தேர்வை 2,393 பேர் எழுதினார்கள். தேர்வர்களுக்கு வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதால் அவதிக்கு உள்ளாகினர்.
குரூப்-2 முதன்மை தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (நேர்முக தேர்வு பதவிகள் மற்றும் நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்- குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ) பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்தாண்டு மே மாதம் 21-ந் தேதி நடைபெற்றது.
இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 2,520 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு முதன்மை தேர்வு இன்று நடைபெற்றது.
இதற்காக வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஊரீசு அரசு மேல்நிலைப்பள்ளி, டி.கே.எம். மகளிர் கல்லூரி உள்பட 11 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தமிழ்தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை பொதுத்தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனால் காலை 8 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வரத்தொடங்கினார்கள். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், புத்தகங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
வேலூர் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 2,305 பேர் எழுதினார்கள். 215 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு தேர்வு கூடங்களில் நடந்த தேர்வை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது தாசில்தார் செந்தில் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் என்று 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு கூடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிற்பகல் நடந்த பொதுத்தேர்வை 2,393 பேர் எழுதினார்கள். 127 பேர் எழுதவில்லை.
வினாத்தாள் குளறுபடி
தேர்வர்களுக்கு காலை 9.20 மணியளவில் வினாத்தாள் வழங்கப்பட்டது. தேர்வர்களின் ஹால்டிக்கெட் பதிவு எண்ணும், அவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களில் உள்ள பதிவு எண்ணும் மாறுபட்டிருந்தது.
அதனால் அதிர்ச்சி அடைந்த தேர்வர்கள் இதுகுறித்து தேர்வறை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர். அவர்கள் இதுபற்றி தேர்வுமைய முதன்மை கண்காணிப்பாளரிடம் கூறினார்.
இதுபற்றி அவர் விசாரிக்கையில், தேர்வு மையம் முழுவதும் உள்ள தேர்வர்களுக்கு வினாத்தாள் மாறி, மாறி வழங்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அனைத்து வினாத்தாள்களும் திரும்ப பெறப்பட்டு, ஒவ்வொரு அறையில் உள்ள தேர்வர்களின் பதிவெண் வரிசைப்படி அவை தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டன.
அதனால் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக தேர்வு தொடங்கியது. இதனை ஈடு செய்யும் வகையில் தேர்வர்கள் 1.30 மணி வரை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதால் தேர்வர்கள் அவதிக்கு உள்ளாகினர்.
இதனால் பிற்பகல் 2 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு 2.30 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை நடைபெற்றது. பிற்பகல் தேர்வில் வினாத்தாள் குளறுபடி ஏற்படவில்லை என்று தேர்வுமைய கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.