வால்பாறையில் பரபரப்பு: அரசு பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்


வால்பாறையில் பரபரப்பு: அரசு பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்
x

வால்பாறையில் அரசு பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை: வால்பாறையில் அரசு பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

24 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் 60 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு 45 மாணவ-மாணவிகள் மட்டுமே வருகை தந்துள்ளனர்.

மதியம் சத்துணவு சாப்பிட்ட பிறகு 3.15 மணியளவில் பள்ளியில் 24 மாணவ-மாணவிகள் திடீரென வாந்தி, மயக்கம், தலைவலி, வயிற்று வலியால் அவதிப்பட்டனர். இதையறிந்த பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வி உடனே வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

பள்ளிக்கு வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மாண வ- மாணவிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். இதனை தொடர்ந்து 24 மாணவ-மாணவிகளை மேற்கொண்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விஷயம் அறிந்த மாணவர்களின் பெற்றோர் பதறியடித்துக்கொண்டு பள்ளிக்கு வந்தனர். அப்போது நன்றாக இருந்த மாணவர்களை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று இருந்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர்.

இதுபற்றி அறிந்த வால்பாறை தாசில்தார் ஜோதிபாசு, நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி ஆகியோர் அரசு ஆஸ்பத்திரியில் மாணவ- மாணவிகளின் உடல் நலம் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து பாதிப்பு இல்லாமல் வீடுகளுக்கு சென்ற மற்ற மாணவ-மாணவிகளையும் பெற்றோர்களிடம் கூறி அரசு ஆஸ்பத்திரிக்கு வரவழைத்து பரிசோதனை செய்யப்பட்டது.

என்ன காரணம்?

பின்னர் நன்றாக இருந்த மாணவ-மாணவிகள் மொத்தம் 27 பேர் சிகிச்சை முடிந்து பெற்றோர்களுடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உடல் ரீதியாக மிகவும் சோர்வாக இருந்த 8 மாணவ-மாணவிகள் மட்டும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவ-மாணவிகள் வாந்தி மாதிரி மற்றும் குடிதண்ணீர் ஆகியவை பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கத்துக்கு சத்துணவு மற்றும் குடிநீர் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று டாக்டர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வால்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story