24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் ஈடுபட நடவடிக்கை
வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் ஈடுபட நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வள்ளுவக்குடி, அகனி, கொண்டல், தென்னங்குடி, ஏனாகுடி, நிம்மேலி, மருதங்குடி, ஆலஞ்சேரி, கொண்டல், கொட்டாயமேடு, அத்தியூர், அகரஎலத்தூர், தேனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்த நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே டாக்டர்கள் பணியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
நோயாளிகள் அவதி
மதியம் 2 மணிக்கு மேல் டாக்டர்கள் இல்லாததால் இந்த பகுதியில் உள்ள நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.இதனால் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருந்து வருகின்றனர்.இதபோல் பூங்கனூர், திருமுல்லைவாசல், எடமணல் ஆகிய சுகாதார நிலையங்களில் இதே நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் டாக்டர்கள் மற்றும் கூடுதல் பணியாளர்களை கொண்டு செயல்பட வேண்டும். மேலும் ஆபத்தான நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.