மலையை சுற்றி 24 மணி நேரமும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்


மலையை சுற்றி 24 மணி நேரமும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்
x

தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட வருவாய் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

கரூர்

புரட்டாசி திருவிழா

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி கண்ணன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் கோவிலின் முன்புறம் நுழைவுவாயில்கள், தேர் பகுதி, தெப்பக்குளம் முன்புறம், முடி எடுக்கும் இடம் அருகில் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் தற்காலிக கடைகள் வைக்க அனுமதிக்கக்கூடாது. பாதுகாக்கப்பட்ட சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வசதி மலையை சுற்றிலும் 24 மணி நேரமும் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்திட வேண்டும். மேலும், ஆண், பெண் இருவருக்கும் தனித்தனியாக தண்ணீர் வசதியுடன் கழிப்பறைகள் ஏற்படுத்தி தர வேண்டும். அவற்றை சுத்தம் செய்ய போதிய பணியாளர்கள் நியமிக்க வேண்டும். பிளிச்சிங் பவுடர், பினாயில் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களும் போதிய அளவில் இருப்பில் வைத்துக் கொண்டு சுகாதார கேடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கழிவு குப்பைகளை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும். முடி காணிக்கை செலுத்த கோவில்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தனிநபர்கள் முடியினை எடுக்க அனுமதிக்கக்கூடாது.

பொருட்களின் தரம்

தேரோடும் பாதையினை சீர் செய்து சாலை தகுதி சான்று வழங்க வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும் தேர்த்திருவிழாவின் போது அதிகளவில் கூடும் பக்தர்கள் நலன் கருதி 2 மருத்துவர்கள், 4 செவிலியர்கள், 2 சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் இரவு பகல் எந்நேரமும் பணியில் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் ஆக்சிஜன் வழங்கும் எந்திரத்துடன் ஆம்புலன்ஸ் குளத்தின் அருகில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் கோவில் வளாகம் மற்றும் மலையை சுற்றிலும் பக்தர்கள் சமைப்பதற்கு அனுமதிக்க கூடாது. பொதுமக்களுக்கு பாக்கெட்டுகளில் வழங்கும் உணவின் தரத்தினையும், கோவிலை சுற்றியுள்ள கடைகளில் உள்ள உணவு பொருட்களின் தரத்தினையும் ஆய்வு செய்திட வேண்டும். மேலும் உணவு தயாரிப்போர் கட்டாயம் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்றிருப்பதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். புரட்டாசி 4 சனிக்கிழமைகள் மற்றும் திருத்தேர் அன்று போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் பஸ் வசதிகள் செய்து தர வேண்டும்.

மின்சாரம்

ேபாலீசார் மலையை சுற்றிலும் தனிநபர்கள் ஒலிபெருக்கி அமைக்க அனுமதி வழங்கக்கூடாது. போக்குவரத்து மாற்றம், ஒரு வழிப்பாதை அமைப்பது மற்றும் பஸ்களை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பணிகளை போக்குவரத்து போலீசாரால் மேற்கொள்ள வேண்டும். தங்குதடை இன்றி மின்சாரம் வழங்கிட வேண்டும். திருத்தேர் அன்று வடம் பிடித்தலுக்கு முன்பாக மின்கம்பிகளை அகற்றவும், தேரோட்டம் முடிந்த பின்பு மின்சாரம் இணைக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். தீயணைப்பு வாகனம் போதிய வீரர்களுடன் நிறுத்தி வைத்திருக்க வேண்டும். தீயணைப்பு வாகனம் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியிலிருந்து சனிக்கிழமை இரவு 12 மணி வரை இருக்க வேண்டும். திருத்தேர் வலம் வரும்போது தேரினை சுற்றிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு வளையம் அமைத்து உடன் வரவேண்டும். பொதுப்பணித்துறை தேரோட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவும், தேரினை அலங்கரித்த பின்னரும் தேரினை ஆய்வு செய்து தேர் நல்ல நிலையில் உள்ளதற்கான உறுதிச்சான்று வழங்கிட வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


Next Story