கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு 60 விசைப்படகில் 2,400 பக்தர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்-ஒருங்கிணைப்பு குழு மனு
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு 60 விசைப்படகுகளில் 2,400 பக்தர்கள் சென்றுவர அனுமதி பெற்று தர வேண்டும் என விழா ஒருங்கிணைப்பாளர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு 60 விசைப்படகுகளில் 2,400 பக்தர்கள் சென்றுவர அனுமதி பெற்று தர வேண்டும் என விழா ஒருங்கிணைப்பாளர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
ஆலய திருவிழா
இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் உள்ளது கச்சத்தீவு. இந்த கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் ஒன்றும் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் பிப்ரவரி மாதம் இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ 2 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டின் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற மார்ச் 3 மற்றும் 4 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இதனிடையே இந்த திருவிழா குறித்து இந்திய பக்தர்கள் பங்கேற்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் சார்பாக முதன்மை குரு ஜோசப் ஜெபரத்தினம் ராமேசுவரம் வேர்க்கோடு புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை தேவசகாயத்திற்கு திருவிழா குறித்த அழைப்பிதழ் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அனுமதி
இதனிடையே இலங்கையிலிருந்து வந்துள்ள கச்சத்தீவு திருவிழா குறித்து அழைப்பிதழ் கடிதத்துடன் நேற்று ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை தேவ சகாயம் மற்றும் மீனவ சங்க பிரதிகள் சகாயம், எமரிட், ஆல்வின் உள்ளிட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள் ராமநாதபுரம் சென்று மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீசை நேரில் சந்தித்து இந்த அழைப்பிதழை கொடுத்தனர்.
அப்போது இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா சென்று வருவதற்கு அரசிடம் அனுமதி பெற்று அதற்கான ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
விண்ணப்பம்
கலெக்டர் சந்திப்புக்கு பின்னர் பங்குத்தந்தை தேவசகாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழகத்திலிருந்து 60 விசைப்படகுகளில் 2400 பக்தர்கள் செல்ல மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கேட்டுள்ளோம். வழக்கமாக ஒரு விசைப்படகில் பயணிகள் 30 பேரும், படகோட்டிகள் 5 பேர் என மொத்தம் 35 பேர் மட்டுமே பயணம் செய்துள்ளோம். ஆனால் இந்த ஆண்டு பயணிகள் 35 பேர், படகோட்டிகள் 5 பேர் என மொத்தம் 40 பேர் ஒரு விசைப்படகில் பயணம் செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி பெற்று தருவதாகவும் கலெக்டர் உறுதி அளித்துள்ளார். இந்த திருவிழாவில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் வருகிற 1-ந்தேதி முதல் ராமேசுவரம் வேர்க்கோடு ஆலயத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
விசைப்படகுகளை தவிர்த்து ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்று வர 18 நாட்டுப்படகுகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் எஸ்.பி.ராயப்பன் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.