கடைகளில் காலாவதியான 244 கிலோ தின்பண்டங்கள் பறிமுதல்
கள்ளக்குறிச்சி கடைகளில் காலாவதியான 244 கிலோ தின்பண்டங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
கள்ளக்குறிச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன் தலைமையிலான அதிகாரிகள் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம், கச்சேரி சாலை, துருகம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், பெட்டிக்கடைகள், மளிகைக்கடைகள், பழச்சாறு கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 2 கடைகளில் விற்பனைக்காக சட்டத்தை மீறி செயற்கை நிறமூட்டப்பட்ட மொத்தம் 75 லிட்டர் பழச்சாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
இதேபோல் சில கடைகளில் காலாவதியான மற்றும் உற்பத்தி தேதி குறிப்பிடப்படாமல் மொத்தம் 244 கிலோ தின்பண்டங்கள் ஆகியவையும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 26 கிலோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 24 குடிநீர்கேன்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து இது தொடர்பாக 11 கடை உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.
அபராதம்
மேலும் உரிமம் இல்லாமல் இயங்கிய 2 உணவகங்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், 4 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரமும் அபராதம் விதித்தனர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், வியாபாரிகள் அனைவரும் அரசு விதித்துள்ள விதிமுறையை கடை பிடித்து வியாபாரம் செய்ய வேண்டும். இதை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்த ஆய்வின் போது கள்ளக்குறிச்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கள்ளக்குறிச்சி கதிரவன், சின்னசேலம் அன்பு பழனி, திருக்கோவிலூர் சண்முகம், நகராட்சி துப்புரவு அலுவலர் ரவீந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.