25 ஏக்கர் நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின


25 ஏக்கர் நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின
x
தினத்தந்தி 2 May 2023 6:45 PM GMT (Updated: 2 May 2023 6:46 PM GMT)

விருத்தாசலம் அருகே 25 ஏக்கர் நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. வாய்க்காலை தூர்வாரததால் நிகழ்ந்த விபரீதம் இது என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்

கடலூர்

கம்மாபுரம்

நெற்பயிர் நீரில் மூழ்கியது

விருத்தாசலம் அருகே உள்ள கோ.மாவிடந்தல் பகுதியில் விவசாயிகள் ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாற்று விட்டு நிலத்தை உழவு செய்து நடவு செய்து தற்போது பயிர் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் உள்ளது.

இந்தநிலையில் விருத்தாச்சலம் பகுதியில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்ததால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதியில் தேங்கியது. மேலும் அருகே உள்ள கோ.மாவிடந்தல் கிராம பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்குள் மழைநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வயல்கள் எல்லாம் குளமாக காட்சி அளித்தது.

விவசாயிகள் கவலை

காலையில் விவசாய நிலத்தை பார்வையிட சென்ற விவசாயிகள் நெற்பயிர் தண்ணீாில் மூழ்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பயிர்கள் அனைத்தும் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்துபயிரிட்ட நெற்பயிர்கள் அழுகிவிடுமோ என கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, வி.சாத்தமங்கலம் ஏரியில் இருந்து வடிகால் வாய்க்கால் செல்கிறது. 32 அடி அகலத்தில் இருந்த இந்த வாய்க்கால் தற்போது எங்கே இருக்கிறது என்று தேடும் வகையில் தனிநபர்களின் ஆக்கிரமிப்பால் நிலமாகவும், பாதையாகவும் மாறிவிட்டது. ஒவ்வொரு முறையும் மழை காலங்களில் இது போன்று விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கி விவசாயம் செய்ய முடியாத அவல நிலை இருந்து வருகிறது. வடிகால் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் அனைவரும் பொதுப்பணித்துறை(நீர்வளம்) அலுவலகத்தையும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தையும் முற்றுகையிடுவோம் என தெரிவித்தனர்.


Next Story