கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்திட 25 ஊராட்சிகள் தேர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்திட 25 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.
தமிழக முதல்-அமைச்சரின் முன்னோடி திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்திட 25 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கிராம ஊராட்சிகள் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவதற்கு ஏதுவாக வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் இதர சகோதரத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இக்கிராம ஊராட்சி விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 25 கிராம ஊராட்சிகள் விவரம் வருமாறு:-
சிறுகன்பூர், டி.களத்தூர், எலந்தலப்பட்டி, தெரணி, கொளத்தூர், திம்மூர், நொச்சிக்குளம், கண்ணப்பாடி, கல்பாடி, சிறுவாச்சூர், சத்திரமனை, களரம்பட்டி, பெரியம்மாபாளையம், தொண்டமாந்துறை, பெரியவடகரை, தழுதாழை, தொண்டப்பாடி, எறையூர், பெரியவெண்மணி, வடக்கலூர், பெரியம்மாபாளையம், அந்தூர், ஆண்டிகுரும்பலூர், ஒதியம், குன்னம். மேற்கண்ட கிராம ஊராட்சிகளில் காய்கறி சாகுபடியை ஊக்குவித்தல், ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த பழச்செடி தொகுப்புகள் வழங்குதல் மற்றும் பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களில் பரப்பு விரிவாக்கம் போன்ற இனங்களில் பொருள் இலக்காக 7,576 எண்கள் மற்றும் நிதி இலக்காக ரூ.18.630 லட்சமும் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனடைய பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ பயன்பெறுமாறு கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.