வளைகாப்பு நிகழ்ச்சியில் சாப்பிட்ட 25 பேருக்கு வாந்தி-மயக்கம்
வளைகாப்பு நிகழ்ச்சியில் சாப்பிட்ட 25 பேருக்கு வாந்தி-மயக்கம்
சீர்காழி அருகே வளைகாப்பு நிகழ்ச்சி்யில் சாப்பிட்ட 25 பேருக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை ெபற்று வருகின்றனர்.
வளைகாப்பு நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு போலீஸ் சரகம் சித்தமல்லி அருகே உள்ள புலவனூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார்(வயது 34). இவரது மனைவி நித்தியாவிற்கு நேற்று முன்தினம் மாலை வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது.
வாந்தி-மயக்கம்
இதனை சாப்பிட்டவர்களுக்கு திடீரென ஒவ்வாமையால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நந்தகுமார் மற்றும் அவரது உறவினர்கள் 25 பேர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 17 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் பாதிக்கப்பட்ட நித்தியா உள்ளிட்ட 8 பேர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
விசாரணை
இதுகுறித்து சீர்காழி, மயிலாடுதுறை, மணல்மேடு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வளைகாப்பு நிகழ்ச்சியில் மதிய உணவு சாப்பிட்ட 25 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.