டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக 250 பணியாளர்கள் நியமனம்
டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக 250 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களிலும் கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா 50 பணியாளர்கள் வீதம் 250 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொசு உற்பத்தியை தடுப்பதற்கான பணியை நேற்று முதல் தொடங்கியுள்ளனர். அந்தந்த மண்டல கோட்ட தலைவர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் தலைமையில், பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் நேற்று முதல் கொசு ஒழிப்பு எந்திரங்கள், மருந்துகளுடன் வீடு, வீடாக சென்று கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசுக்களை ஒழிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
மேலும், சுகாதாரஅலுவலர்கள் குழு தனியாக மாநகரில் அதிகப்படியான காய்ச்சல் உள்ள பகுதிகள் ஏதேனும் இருக்கிறதா? என கண்டறிந்து அங்கு சிறப்பு கவனம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான குழுவும் பணியாற்றி வருகிறார்கள்.
இது குறித்து மாநகராட்சிஅதிகாரிகள் கூறுகையில், `மாநகராட்சியில் கொசு உற்பத்தியை தடுக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அப்போது பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் பொதுமக்களுக்கு குறைந்தபட்சம் ரூ.500 அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.