2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொற்பனைக்கோட்டை
சங்க கால தமிழர்கள் பயன்படுத்திய 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொற்பனைக்கோட்டையை தமிழக அரசு அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
பொற்பனைக்கோட்டை
தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாறை உலக அறிய செய்யும் வகையில், தமிழகத்தில் ஆங்காங்கே தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் நடைபெறுகிறது. இதில் கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, பெரும்பாலை, துலுக்கர்பட்டி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வின் போது தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் பல அரிய பொருட்கள் கிடைத்தன.
இந்த நிலையில் புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை என்ற பகுதியிலும் தமிழக அரசு அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆய்வு கழகத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். பொற்பனைக்கோட்டை என்பது சங்க கால தமிழர்கள் பயன்படுத்திய ஒரு கோட்டையாகும். புதுக்கோட்டையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வட்ட வடிவில் உள்ள கோட்டையின் சுற்றளவு 1.63 கிலோ மீட்டரும், 50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகவும் உள்ளது.
கோட்டை நான்கு புற வாயில்கள் கொண்டதாகவும் தற்போதைய நிலையில் உள்ளது. கோட்டையின் வடக்குப்புற மண் சுவரின் அடிமானம் சுமார் 50 அடி அகலமும், 40 அடி உயரத்துடனும் சாய்வாக அமைந்துள்ளது.
கோட்டைச்சுவர்
கோட்டையின் மேற்புறத்தில் 10 அடி அகலத்துடன் மண் மற்றும் செம்புராங்கல் கொண்ட சுற்றுப்பாதை அமைப்பு உள்ளது. இதன் வெளிப்புறத்தில் 4 அடி அகலத்தில் சங்க கால செங்கல் கட்டுமானத்துடன் கூடிய கோட்டைச்சுவர் மற்றும் குறிப்பிட்ட இடைவெளிகளில் அம்பு எய்யும் அறைகள் (கொத்தளங்கள்) தொடர்ச்சியாக காணப்படுகிறது. இது சாதாரண மண் மேடல்ல கோட்டைதான் என்பதை தொல்லியல் ரீதியில் அடையாளப்படுத்த மிக முக்கியமான சான்றாகும். கோட்டை இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுவதோடு அதன் நடுப்பகுதியில் மரங்கள் வளர்ந்து, புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. கோட்டையின் உள்ளே அகழி இருந்ததற்கான அடையாளங்களும் ஒரு குளமும் உள்ளது. பொற்பனைக்கோட்டையில் கடந்த 2016-ம் ஆண்டு தொல்லியல் ஆய்வு கழகத்தினர் கள ஆய்வு மேற்கொண்ட போது கோட்டையை சங்க கால தமிழர்கள் பயன்படுத்தியதற்கான அடையாளங்கள் கிடைத்தன. அதனால் இந்த பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் தொல்லியல் ஆய்வு கழகத்தினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
பழங்கால பொருட்கள்
அதன் அடிப்படையில் ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இனியன் தலைமையில் அகழவாய்வு நடைபெற்றது. தொல்லியல் கழகத்தினர் கள ஆய்வின் போது பழமையான கூரை ஓடுகள், ரோமன் கூரை ஓடுகள், ஆம்போரா குடுவையை ஒத்த உள்நாட்டு குடுவையின் அடிமானம், சூதுபவள மணிகள், உலோக பொருட்கள், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்பு உருக்கு குடுவைகள், விளையாட்டு வட்ட சில்கள் கண்டெடுக்கப்பட்டன.
மேலும் செங்கலால் ஆன நீர் கால்வாய் அமைப்பு, பெரிய அளவிலான மண்பாண்டங்கள், வேலைப்பாடுகள் கொண்ட மண்பாண்ட சில்கள், கருப்பு, சிவப்பு மண்பாண்டங்கள், குவாட்சைட் மணிகள், சிறிய அளவிலான உலோக பொருட்கள், சங்கு வளையல்கள், நீர்க்குடுவைகளின் குமிழ் அமைப்புகள், மண்பாண்ட காதணிகள், மண்பாண்ட சிறிய தட்டுகள், சிறு, சிறு குடுவைகளின் உடைந்த பகுதிகள், பெரிய கலன்களின் அடிமானம், பானை குறியீடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன.
மத்திய அரசு அனுமதி
இதேபோல இரும்பு உருக்கு பொருட்களும் கிடைத்தன. அகழாய்வு பணியின் போது கிடைத்த அரிய பொருட்கள் அனைத்தும் சென்னையில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அகழாய்வு நடைபெற்று முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆனது. அதன்பிறகு அகழாய்வு எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் தமிழக அரசின் தொல்லியல் துறை மூலம் அகழாய்வு நடத்த தொல்லியல் ஆய்வு கழகத்தினர் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது இது நிறைவேறி உள்ளது.
பொற்பனைக்கோட்டையில் தமிழக அரசு அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் தமிழக அரசே பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளும். இதில் நவீன தொழில்நுட்பத்துடன் அகழாய்வு நடைபெறும் போது மேலும் பல அரிய பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தமிழர்களின் சான்று மேலோங்கும்.
2 ஆயிரத்து 500 ஆண்டுகள்...
தொல்லியல் துறை ஆய்வினால் கிடைக்கும் பயன்கள் குறித்து தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், ``பொற்பனைக்கோட்டை சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்ததாகும். தமிழக அரசு மூலம் தொல்லியல் துறையினர் அகழாய்வு மேற்கொள்ளும் போது இதற்கான சான்றுகள் மேலும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொல்லியல் துறையினர் அதி நவீன கருவிகள், தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த பகுதியை ஆய்வு மேற்கொள்வார்கள்.
ஸ்கேன் போன்று செய்யப்படுவதில் மண்ணுக்கு அடியில் பொருட்கள் கிடப்பது தெரியவரும். இதில் பெரிய குழியை அகழாய்வு பணிக்காக தோண்டப்படுவதை போன்று தோண்டி அதில் இருந்து பொருட்களை சேகரிப்பார்கள். இந்த பொருட்கள் நமக்கு வரலாற்று சான்றாக அமையும். சங்க கால தமிழர்களின் சான்றை நாம் அறிய முடியும். இதில் கிடைக்கும் பொருட்கள் காட்சிப்படுத்தப்படும். இந்த அகழாய்வு பணியின் போது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பொற்பனைக்கோட்டை பகுதியும் வரலாற்றில் இடம்பெறும்'' என்றார்.
பொற்பனைக்கோட்டை பெயர் வர காரணம்
பொற்பனைக்கோட்டை என்பதற்கான பெயர் வர காரணம் பற்றி பல்வேறு தகவல்கள் உலாவுகின்றன. இக்கோட்டையில் ஏராளமான பனைமரங்கள் இருந்ததாகவும், அதில் தங்க பனம்பழம் காய்த்ததாகவும் அதனால் பொற்பனைக்கோட்டை என அழைக்கப்பட்டது உள்ளது. மேலும் பனையே பொன்னாக மாறியதாகவும், அதனால் பொற்பனைக்கோட்டை என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.தொல்லியல் ஆய்வு கழகத்தினர் கூறுகையில், பனைமரத்தில் பழம் பழுத்திருக்கும் போது மஞ்சள் நிறத்தில் காணப்படும். அதனால் அதனை தங்க பனம்பழம் என கருதியிருக்கலாம் என கூறுகின்றனர்.மேலும் கல்வெட்டுகளில் பொற்பனைக்கோட்டை என குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கின்றனர். பொற்பனைக்கோட்டையில் காவல் தெய்வங்கள் காணப்படுகின்றன. இதில் முனீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றவையாகும். இன்றளவும் புதுக்கோட்டை நகரின் காவல் தெய்வமாக மக்கள் வணங்கி வருகின்றனர்.