தண்ணீரின்றி கருகி வரும்25 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள பயிர்கள்


தண்ணீரின்றி கருகி வரும்25 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள பயிர்கள்
x
தினத்தந்தி 27 Oct 2023 6:45 PM GMT (Updated: 27 Oct 2023 6:46 PM GMT)

மங்களூர் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடலூர்

சிறுபாக்கம்,

மங்களூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதையடுத்து மங்களூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சிறுபாக்கம், மலையனூர், மாங்குளம், ரெட்டாக்குறிச்சி, அடரி, கீழ்ஒரத்தூர் உள்பட 50 கிராமங்களில் உள்ள மானாவாரி நிலங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். பயிர்கள் நன்கு வளர்ந்து வந்ததால் இந்தாண்டு நல்ல வருமானம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு மாறாக மங்களூர் பகுதியில் இது வரை பருவமழை பெய்யவில்லை. இதனால் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்கள் தற்போது தண்ணீரின்றி கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பருவமழையை எதிர்பார்த்து நாங்கள் அதிக நிலப்பரப்பில் மக்காளச்சோளம் சாகுபடி செய்து பராமரித்து வந்தோம். பெரும் செலவு செய்து அடி உரம் இட்டும், பூச்சி மருந்து தெளித்தும் பயிர்களை பாதுகாத்து வந்தோம்.

25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு

ஆனால் நாங்கள் எதிர்பார்த்த பருவமழை இது வரை பெய்யாததால் எங்கள் கண் முன்பே பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகிறது. இதனால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகிறது.. இதன் காரணமாக இந்தாண்டு எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளான எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story
  • chat