ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் போலீஸ்காரர் உள்பட 26 பேர் படுகாயம்


ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் போலீஸ்காரர் உள்பட 26 பேர் படுகாயம்
x

மணப்பாறை அருகே செவலூரில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் போலீஸ்காரர் உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி

மணப்பாறை அருகே செவலூரில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் போலீஸ்காரர் உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த செவலூரில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

அதைத்தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

இதில் ஒரு சில காளைகள் தன்னை பிடிக்க வந்த வீரர்களை முட்டி தள்ளியும், வீரர்களிடம் பிடிபடாமலும் சீறிப்பாய்ந்து சென்றன. சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது. இதில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், சைக்கிள், பீரோ, சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள், என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

26 பேர் படுகாயம்

ஜல்லிக்கட்டில் 686 காளைகள், 364 வீரர்கள் பங்கேற்றனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் ஒரு போலீஸ்காரர் உள்பட 26 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு ஏற்கனவே தயாராக இருந்த முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் மேற்பார்வையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பள்ளி - கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டதால் ஜல்லிக்கட்டை காண மாணவ-மாணவிகள் அதிக அளவில் வந்து இருந்தனர். பொதுமக்களும் குடும்பமாக வந்து ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர். ஜல்லிக்கட்டை காண வந்த பார்வையாளர்களுக்கு விழாக்குழு சார்பில் உணவு வழங்கப்பட்டது.


Next Story