தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,680 வழக்குகளுக்கு தீர்வு
விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,680 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
விழுப்புரம்
தேசிய மக்கள் நீதிமன்றம்
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான பூர்ணிமா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். நீதிபதிகள் விஜயகுமார், தேன்மொழி, புஷ்பராணி, பிரபாதோமஸ், ஜெயப்பிரகாஷ், பாக்யஜோதி, வெங்கடேசன், சுந்தரபாண்டியன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி சாரா கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன.
2,680 வழக்குகளுக்கு தீர்வு
இம்முகாமில் நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், வக்கீல்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர். இதன் முடிவில் 4,980 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் 2,680 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.25 கோடியே 72 லட்சத்து 97 ஆயிரத்து 232-க்கு தீர்வு காணப்பட்டது.