27,140 டன் யூரியா உரம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
மலேசியாவில் இருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு வந்துள்ள 27,140 டன் யூரியாவை பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
மலேசியாவில் இருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு வந்துள்ள 27,140 டன் யூரியாவை பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
44 ஆயிரம் டன் யூரியா
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தமிழக விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் 44 ஆயிரம் டன் யூரியா உரம் காரைக்கால் துறைமுகத்திற்கு நேற்று வந்தது.
இதை தொடர்ந்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், காரைக்கால் துறைமுகத்திற்கு நேரில் சென்று உரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து உரத்தின் தன்மை குறித்து அதிகாரிகளுடன் சோதனை செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்துக்கு 27,140 டன் ஒதுக்கீடு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியால் மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் 44 ஆயிரம் டன் யூரியா காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு வந்துள்ளது.இதில் டிசம்பர் மாதத்திற்கு 27,140 டன் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தேவையின் அடிப்படையில் ெரயில் மூலமாகவும், சாலை மார்க்கமாகவும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு யூரியா அனுப்பி வைக்கப்படும். இந்த உரத்தினை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற வேண்டும்.
இருப்பு வைக்க வேண்டும்
நாகை மாவட்டத்தில் தற்போது 1,573 டன் யூரியா, 110 டன் டி.ஏ.பி., 353 டன் பொட்டாஷ், 876 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் அக்கண்டராவ் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.