28 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


28 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 6 Sept 2023 1:00 AM IST (Updated: 6 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

28 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோயம்புத்தூர்

கோவை

கோவை அருகே 28 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தலைமறைவான 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ரகசிய தகவல்

குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவின்பேரில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி கோவையை அடுத்த அரசூர் பொத்தயம்பாளையம் சூரம்மடை தோட்டத்தில் உள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி பதுக்க வைக்கப்பட்டு இருப்பதாக கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ரேஷன் அரிசி

அப்போது அங்கு ஒரு லாரியில் சிலர் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். உடனே போலீசார் அந்த லாரியில் ஏற்பட்டு இருந்த மூட்டைகளை சோதனை செய்தபோது அது ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த லாரியில் இருந்த 10 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அத்துடன் அந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் அந்த குடோனில் சோதனை செய்தனர். அதில் அங்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

28 டன் பறிமுதல்

இதை தொடர்ந்து அங்கு இருந்த 18 டன் ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் அங்கிருந்து 480 மூட்டைகளில் இருந்து 28 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்திச்செல்ல பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்துவதற்காக சக்தி, லிங்கேஸ்வரன், கணேசமூர்த்தி ஆகியோர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் போலீசார் வருவதை அறிந்து தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story