285 லிட்டர் சாராயம் பறிமுதல்; 3 பேர் கைது
போலீசார் நடத்திய சாராய வேட்டையில் 285 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தாரணேஸ்வரி, ஜெயலட்சுமி, சந்திரன் தலைமையில் 3 சிறப்பு படைகள் அமைத்து கல்வராயன் மலை முழுவதும் அதிகாலை முதல் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மேல் வெள்ளாறு ஓடை அருகே ஒரு பேரலில் சாராயம் காய்ச்சுவதற்காக சுமார் 200 லிட்டர் புளித்த சாராய ஊறலை மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அதனை தரையில் கொட்டி அழித்தனர்.
மேலும் தும்பரம்பட்டு, ஈச்சங்காடு மற்றும் நொச்சிமேடு ஆகிய இடங்களில் நடத்திய சோதனையில் சாராயம் விற்பனைசெய்து கொண்டிருந்த தும்பராம்பட்டை சேர்ந்த வேலாயுதம்(வயது 52), ஈச்சங்காடு பொன்னுதுரை(47), நொச்சிமேடு சின்னரான்(60) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடா்ந்து ஈச்சங்காடு அருகே நடத்திய வாகன சோதனையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் போலீசாரை கண்டதும் சாராயத்துடன் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து மோட்டார் சைக்கிளுடன் சாராயத்தை போலிசார் பறிமுதல் செய்தனர். கல்வராயன்மலைப்பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 285 லிட்டர் சாராயம், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தப்பி ஒடிய மர்மநபரை வலைவீசி தேடி வருவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவா தெரிவித்தார்.