28,658 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர்


28,658 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர்
x

தஞ்சை மாவட்டத்தில் 28ஆயிரத்து,658 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர்.

தஞ்சாவூர்


தஞ்சை மாவட்டத்தில் 28ஆயிரத்து,658 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர்.

பிளஸ்-2 தேர்வு

தமிழகத்தில் 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. இந்த தேர்வுகள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை நடைபெறுகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த தேர்வு 112 மையங்களில் நேற்று நடைபெற்றது.

இந்த தேர்வினை 225 பள்ளிகளை சேர்ந்த 29 ஆயிரத்து 888 மாணவ, மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

இதில் மாணவர்கள் 14 ஆயிரத்து 641 பேரும், மாணவிகள் 15 ஆயிரத்து 247 பேரும் அடங்குவர். தேர்வுப் பணியில் 112 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், 112 துறை அலுவலர்கள், 7 வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள், 27 வழித்தட அலுவலர்கள், 139 நிலையான, பறக்கும் படை உறுப்பினர்கள், 1961 அறைக்கண்காணிப்பாளர்கள், 194 சொல்வதை எழுதுபவர்கள் மற்றும் 225 அலுவலகப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

281 மாற்றுத்திறனாளி மாணவர்கள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் 281 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இந்த மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரைதளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதோர், டிஸ்லெக்சியா மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்தும் ஆணை வழங்கப்பட்டு இருந்தது.

தஞ்சை மாவட்டத்தில் தேர்வு பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்க தமிழக அரசால் தனியார் பள்ளிகள் இயக்கக துணை இயக்குனர் சம்பத் கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்து தேர்வு பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பஸ்வசதி

மேலும் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அலுவலர், உதவி கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆய்வு அலுவலர், ஊர்க்காவல் படைத்தலைவர் மற்றும் பிற துறை அலுவலர்களை கொண்டு மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களை திடீர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், மற்றும் கழிப்பிட வசதி செய்யப்பட்டு இருந்தது. தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சார வசதியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு பஸ் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. மேலும் தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சை மாவட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 1,230 பேர் தேர்வு எழுதவில்லை. இதில் 782 மாணவர்கள். 448 மாணவிகள் ஆவர். மொத்தம் 4 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை. 28ஆயிரத்து,658 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர்.


Next Story