14,953 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்


14,953 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 3 March 2023 7:30 PM GMT (Updated: 3 March 2023 7:30 PM GMT)
சேலம்

சேலம் மாவட்டத்தில் இதுவரை 14,953 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சிறப்பு முகாம்கள்

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களது இடத்திற்கே நேரடியாக அரசு அலுவலர்கள் சென்று கோரிக்கைகளை கேட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கல்வித்துறை, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் எளிதாக கிடைத்திடும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 21 நாட்கள் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்களில் அடையாள அட்டை வேண்டி 4,174 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம் அளித்தனர்.

பின்னர் அந்த மனுக்களை வருவாய்த்துறை மற்றும் மருத்துவத்துறையினரால் அந்த இடத்திலேயே பரிசீலனை செய்து உடனடியாக மருத்துவச்சான்றுடன் கூடிய மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது.

கலெக்டர் பங்கேற்பு

சேலம் அருகே உடையாப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு, மனுக்கள் அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த முகாமில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

கடந்த 1.1.2023 முதல் மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு வழங்கிய வகையில் இந்தியாவிலேயே சேலம் மாவட்டம் சிறந்த மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

16,183 மனுக்கள்

சேலம் மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க வங்கிக்கடன் வேண்டியும், பராமரிப்பு உதவித்தொகை வேண்டியும், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு மனைப்பட்டா, ஆதார் அடையாள அட்டை, கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள் வேண்டியும் என மொத்தம் 16,183 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதன்மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் தொடர்புடைய அலுவலர்களுக்கு இந்த மனுக்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சேலம் மாவட்டத்தில் இதுவரை 69,568 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நடப்பு நிதியாண்டில் 11,909 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.22¾ கோடியும், 1,205 மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.44¼ லட்சமும், 680 பயனாளிகளுக்கு சிறப்பு பள்ளிகள் மற்றும் உணவூட்டும் மானியமாக ரூ.1.61 கோடியும், 377 பயனாளிகளுக்கு கூட்டுறவு வங்கிக்கடனாக ரூ.2 கோடியும் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.29.39 கோடியில் உதவிகள்

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு ரூ.24.70 லட்சம் மதிப்பில் செயற்கை அவயங்களும், 332 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.73 கோடியில் உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் மாவட்டத்தில் இதுவரை 14,953 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29.39 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story