கஞ்சா வழக்கில் தொடர்புடைய 29 பேர் மீது சரித்திர பதிவேடு தொடக்கம்-போலீஸ் கமிஷனர் பேட்டி


கஞ்சா வழக்கில் தொடர்புடைய 29 பேர் மீது சரித்திர பதிவேடு தொடக்கம்-போலீஸ் கமிஷனர் பேட்டி
x
தினத்தந்தி 27 Jun 2023 7:29 PM GMT (Updated: 28 Jun 2023 12:25 PM GMT)

திருச்சி மாநகரில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய 29 பேர் மீது சரித்திர பதிவேடு தொடக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா கூறினார்.

திருச்சி

திருச்சி மாநகரில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய 29 பேர் மீது சரித்திர பதிவேடு தொடக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா கூறினார்.

அரிஸ்டோ மேம்பாலம்

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மத்திய பஸ்நிலையத்திலிருந்து இரு வழிப்பாதையாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த பாலத்தின் 2 வழித்தடங்களில் மட்டும் இருவழி பாதையாக மாற்றுவதற்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இன்னும் சில நாட்களில் இது இருவழிப்பாதையாக மாற்றப்படும். முதலில், சிறிய ரக வாகனங்கள் மட்டும் இருவழிப்பாதையில் அனுமதிக்கப்படும். திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

29 பேருக்கு சரித்திர பதிவேடு தொடக்கம்

மாநகரில் ஏற்கனவே 1,600 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. தற்போது கூடுதலாக 1,000 கேமராக்கள் பொருத்தப்பட்டு 2,600 கேமராக்கள் இயங்கி வருகின்றன. அவை அனைத்தும் சரியாக செயல்படுகிறதா? என தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும் கூடுதலாக, கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் தொடர்புடைய 29 பேருக்கு சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டு அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இது தவிர கஞ்சா வரத்து மற்றும் விற்பனை குறித்தும் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதை பொருள் குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story