கவர்னரை திரும்ப பெறக்கோரி சென்னையில் 29-ந்தேதி போராட்டம் - முத்தரசன் அறிவிப்பு


கவர்னரை திரும்ப பெறக்கோரி சென்னையில் 29-ந்தேதி போராட்டம் - முத்தரசன் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2022 8:07 PM GMT (Updated: 3 Dec 2022 8:11 PM GMT)

கவர்னரை திரும்ப பெறக்கோரி சென்னையில் வருகிற 29-ந்தேதி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

திருநெல்வேலி

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 1-ந்தேதி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் 20-வது மாநில மாநாடு தொடங்கியது. இந்த மாநாடு நேற்று நிறைவு பெற்றது. இதையொட்டி நேற்று மாலையில் பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை அருகே பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் காசி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சடையப்பன் வரவேற்றார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 6-ந்தேதி அம்பேத்கர் நினைவு நாளில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். வருகிற 26-ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொடக்க நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். சட்டப்பேரவை மசோதாவை மதிக்காத தமிழக கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 29-ந்தேதி சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும். மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து விற்பனை செய்யும் மத்திய அரசை கண்டித்து அடுத்த மாதம் (ஜனவரி) 24-ந்தேதி தமிழகம் ழுமுவதும் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர்கள் வஹிதா நிஜாம், மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு மாநில துணை செயலாளர் பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார். முன்னதாக பாளையங்கோட்டை மரியா கேன்டீன் பஸ் நிறுத்தம் அருகே இருந்து செந்தொண்டர் அணிவகுப்பு பேரணி நடந்தது. இந்த பேரணியை முத்தரசன் தொடங்கி வைத்தார். இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து முடிவடைந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story