வாலிபரின் கையை வெட்டி மோட்டார் சைக்கிளை பறித்த 3 பேர் கைது
கருமத்தம்பட்டியில் வாலிபரின் கையை வெட்டி மோட்டார் சைக்கிளை பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூலூர்
கருமத்தம்பட்டியை அடுத்த வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது24). இவருடைய நண்பர் கார்த்திக் (24). இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று இரவு அரசூர் - தென்னம்பாளையம் ரோட்டில் தனியார் ஓட்டலின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களின் மோட்டார் சைக்கிளை ஒருவர் வழி மறித்தார். உடனே அங்கு மறைந்து இருந்த மர்ம நபர்கள் 2 பேர் விரைந்து வந்து அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டினர்.
இதையடுத்து அரிவாளால் கார்த்திக்கின் கையை வெட்டி விட்டு மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சாந்தபிரியன் (21), விஜய் (20), ரிதிக்குமார் (19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், செல்போன், அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.