இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது


இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-31T00:15:18+05:30)

ஊட்டியில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விபசாரத்துக்கு அழைப்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பர்ன்ஹில் பகுதியை சேர்ந்த 35 வயது விவசாயி ஒருவர் நேற்று முன்தினம் மதியம் தனது டிராக்டரை எடுத்துக்கொண்டு ஊட்டியை நோக்கி வந்தார். இதற்கிடையில் ஊட்டி-கோத்தகிரி சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் டீ குடித்து கொண்டு இருந்தபோது விவசாயியிடம், அங்கு வந்த ஒருவர் பேச்சு கொடுத்தார்.

தொடர்ந்து அவர், கோத்தகிரி சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும், அந்த தங்கும் விடுதியில் 4 அறைகள் உள்ளதாகவும்,அதில் 20 வயதில் இருந்து 25 வயதுக்குள் உள்ள 2 இளம்பெண்களை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் செய்து வருவதாகவும், ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 மற்றும் அறை வாடகைக்கு ரூ.1,000 கொடுத்து உல்லாசம் அனுபவிக்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

3 பேர் சிக்கினர்

இதையடுத்து விவசாயி அங்கு சென்று பார்வையிட்டார். அப்போது 2 இளம்பெண்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு ஊட்டிக்கு வந்து விட்டார். மேலும் ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணி குமார், சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்த தனியார் விடுதி மேலாளரான தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த சையத் அலி என்பவர் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்த ரகுபதி மற்றும் அபூபக்கர் சித்திக் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் 3 பேரையும் ஊட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 இளம்பெண்களையும் மீட்டு ஊட்டியில் உள்ள தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story