விழுப்புரத்தில்கடன் தர மறுத்த வாலிபரை கொன்ற 3 பேர் அதிரடி கைதுகலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்


விழுப்புரத்தில்கடன் தர மறுத்த வாலிபரை கொன்ற 3 பேர் அதிரடி கைதுகலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:46 PM GMT)

விழுப்புரத்தில் கடன் தர மறுத்த வாலிபரை வெட்டிக்கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுத் தரக்கோரி உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

வாலிபர் கொலை

விழுப்புரம் சித்தேரிக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ஸ்ரீராம் என்கிற ராம்குமார் (வயது 30). இவருக்கு பிரியா (23) என்ற மனைவியும், ரக்ஷணன் (4) என்ற மகனும், ரக்ஷிதா (3) என்ற மகளும், ரக்ஷனா என்ற 6 மாத கைக்குழந்தையும் உள்ளது. வட்டிக்கு பணம் கொடுத்து வரும் ஸ்ரீராம் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் சித்தேரிக்கரை ரெயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு பதுங்கி இருந்த அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் பாலாஜி (27) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஸ்ரீராமை வழிமறித்து வீச்சரிவாளால் வெட்டிக்கொலை செய்தார்.

3 பேர் சிக்கினர்

இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஸ்ரீராமிடம் கடந்த மாதம் 19-ந் தேதியன்று பாலாஜி ரூ.2 ஆயிரம் கடன் கேட்டுள்ளார். அதற்கு, ஸ்ரீராம் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாலாஜி, தனது நண்பருடன் சேர்ந்து ஸ்ரீராமை தாக்கியுள்ளார். இதுகுறித்து ஸ்ரீராம் கொடுத்த புகாரின்பேரில் நகர போலீசார் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். இதனிடையே ஸ்ரீராம் பாலாஜியின் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த பாலாஜியின் தாயிடம் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி தனது வீட்டுக்கு வராமல் தனது நண்பர்களுடன் தலைமறைவாக இருந்ததுடன், தன் தாயாரை திட்டிய ஸ்ரீராமை தீர்த்துக்கட்ட கண்டமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணப்பன் மகன் பிரகாஷ் (26), கண்டமங்கலம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் அய்யப்பன் (22) ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். அதன்படி பாலாஜி தனது நண்பர்களின் உதவியுடன் ஸ்ரீராமை வெட்டிக்கொலை செய்தது மேற்கண்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பாலாஜி உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் பகுதியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய வீச்சரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ஸ்ரீராமின் மனைவி பிரியா மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையறிந்ததும் விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் நகர போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஸ்ரீராமின் குடும்பத்தினர், உறவினர்கள் கூறுகையில், ஸ்ரீராமை கொலை செய்த 3 கொலையாளிகளுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுத்தர வேண்டும், ஸ்ரீராமின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அவரது 3 குழந்தைகளின் கல்வி செலவுக்கு அரசு உதவி செய்ய வேண்டும், மேலும் ஸ்ரீராமின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முறையிட்டனர். இதை கேட்டறிந்த கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, மேற்கண்ட கோரிக்கைகளை மனுவாக எழுதிக்கொடுக்குமாறும், அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story