ஊட்டியில் வேனில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது-180 மதுபாட்டில்கள் பறிமுதல்
ஊட்டியில் வேனில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டதோடு, 180 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊட்டி
ஊட்டியில் வேனில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டதோடு, 180 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மது விற்பனை
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதை தொடர்ந்து மது விற்பனையை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில் ஊட்டி புதுமந்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அல்லிராணி உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அத்திகல் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் இருந்த 2 பேர் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
180 மது பாட்டில்கள் பறிமுதல்
இதையடுத்து வேனில் சோதனை செய்தபோது, டாஸ்மாக்கில் வாங்கி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில் வேனில் இருந்தவர்கள் கோவையை சேர்ந்த சுரேஷ், சோலூரை சேர்ந்த ஆசிக் என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் வேனில் இருந்த 180 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து மதுபாட்டில்கள் விற்பனையில் தொடர்பு இருந்த முக்கிய குற்றவாளியான கூக்கள் பகுதியை சேர்ந்த போஜன் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதன்பின்னர் அவர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.