தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது
தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளி வெட்டிக்கொலை
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அண்ணா நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38). கூலி தொழிலாளி இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான தேவா (53) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேப்பம்பட்டு அயத்தூர் டன்லப் நகர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் முருகேசனை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.
3 பேர் கைது
இதுகுறித்து செவ்வாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அண்ணா நகரை சேர்ந்த சரவணன் (22), அவரது நண்பர்களான பார்த்திபன் (23), வினோத் (20) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சரவணன் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
முன்விரோதம்
கடந்த 2020-ஆம் ஆண்டில் வேப்பம்பட்டு பகுதியில் எனது நண்பர்கள் பார்த்திபன், வினோத் ஆகியோருடன் சூப் சாப்பிட சென்றோம். அப்போது அங்கிருந்த முருகேசனுக்கும் எங்களுக்கும் இடையே சூப்பு வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அதை அடுத்து முருகேசன் திருவண்ணாமலையில் உள்ள தனது உறவினர் விட்டு சென்று தங்கினார்.
கடந்த 20 நாட்களுக்கு முன் முன்னர் மீண்டும் அவர் வேப்பம்பட்டிற்கு வந்தார். இதையறிந்த நாங்கள் அவரை பழிவாங்க திட்டமிட்டு நேற்று முன்தினம் முருகேசன் மோட்டார் சைக்கிளில் சென்றதை நோட்டமிட்டு நாங்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சென்று அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றோம் என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சரவணன், பார்த்திபன், வினோத் ஆகிய 3 பேரையும் போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.