தியாகதுருகம் அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் கைதான 3 பேர் கடலூர் மத்திய சிறையில் அடைப்பு
தியாகதுருகம் அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் கைதான 3 பேர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருடைய மனைவி செந்தமிழ் செல்வி. இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். இவர்களுடைய மகன் ஜெகன் ஸ்ரீ (வயது 19). இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி கூத்தக்குடி காப்புக்காட்டில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு கிடந்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் தாசில்தார் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் ஜெகன்ஸ்ரீ உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஜெகன் ஸ்ரீயை அதே ஊரை சேர்ந்த அங்கமுத்து மகன் அய்யப்பன் (32), மணிகண்டன் மகன் ஆகாஷ் (20), ரவிச்சந்திரன் மகன் அபிலரசன் (27) 17 வயது சிறுவன் ஆகியோர் மது பாட்டிலால் தாக்கியும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து நேற்று கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்பு ஆஜர்படுத்தினர். இவர் அய்யப்பன், ஆகாஷ், அபிலரசன் ஆகிய 3 பேரையும் 15 நாள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் அய்யப்பன் உள்பட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 17 வயது சிறுவன், கடலூர் சாவடி பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.