கோவை: பள்ளி முடிந்து விளையாட சென்ற 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி..!
சூலூரில் விளையாடச் செல்வதாக கூறிச் சென்ற பள்ளி சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் சூலூர் - மதியழகன் நகரை சேர்ந்தவர் சரண்யா பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய கணவர் பாலகிருஷ்ணன் லோடுமேன். இவர்களுக்கு சஸ்வந்த், மவுசிக் என இரு மகன்களும் ஸ்வஸ்திகா என்ற மகளும் உள்ளனர்.
இவர்களுடைய மகன்கள் சூலூர் எஸ்.எல். பி நகரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளனர். இன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சஸ்வந்த் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த அவன் பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாட சென்றுள்ளான்.
இந்த நிலையில் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சரண்யாவிற்கு இன்று மாலை 5.30 மணியளவில் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்கள் விளையாடச் சென்ற சரண்யாவின் மகன் சஷ்வந் (8) செங்கத்துறை சாலையில் உள்ள சூலூர் சின்ன குளத்தில் தவறி விழுந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக சரண்யா சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு விளையாட சென்ற இவரது மகன் சஸ்வந்த் (8) 3-வது படிக்கும் மாணவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் சஞ்சீவ் (7), 2-வது படிக்கும் மாணவன் அன்பு என்பவரின் மகன் அகிலன் (10) 5-வது படிக்கும் மாணவன் ஆகியோர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டதாகவும் அவர்களை சூலூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளதாகவும் அங்கு உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது நீரில் மூழ்கிய மூன்று சிறுவர்களும் இறந்து விட்டார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சஸ்வந்த்தின் தாயார் சரண்யா அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.