அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு; ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
சங்கராபுரத்தில் அடுத்தடுத்து 3 கடைகளில் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தையும் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம்,
3 கடைகளில் திருட்டு
சங்கராபுரம் தியாகராஜபுரம் ரோட்டில் வசித்து வருபவர் அப்துல் அமீது. இவருடைய மகன் சலீம் (வயது 46). இவர் பேரூராட்சி வளாக கட்டிடத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றார். பின்னா் நேற்று காலை மீண்டும் வந்து பார்த்த போது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கண்காணிப்பு கேமரா சேதமடைந்து கிடந்தது. மேலும் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் பணத்தை காணவில்லை. அதை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இதைபோல் ரிஜிஸ்டர் ஆபீஸ் பின்புறம் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி (43) என்பவர் நடத்தி வரும் ஸ்டேஷனரி மற்றும் எசென்ஸ் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரத்தை திருடிய மர்மநபர்கள் தடயங்களை கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்றுள்ளனர்.
பழங்களையும் விட்டு வைக்காமல்
மேலும் கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டில் உள்ள அப்துல் அமீது மகன் ஷேக் தாவூத் (57) என்வரின் பழக்கடையின் பூட்டை உடைத்தும் மர்மநபா்கள் ரூ.5 அயிரம் பணம் மற்றும் ரூ.4 ஆயிரம் மதிப்பிலான பழங்களையும் மர்மநபர்கள் விட்டு வைக்காமல் திருடிச்சென்று விட்டனர். முன்னதாக சங்கராபுரம் பஸ்நிலையத்தில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தையும் மர்மநபர்கள் உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.
வலைவீச்சு
இச்சம்பவங்கள் குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, சிவசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாகு மற்றும் போலீசார் திருட்டு நடந்த கடைகள் மற்றும் திருட முயற்சித்த ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அங்கிருந்த கண்காணிப்பு மேகராக்களையும் ஆய்வு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு நடந்துள்ளதால், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.