சென்னையில் 3 நாள் கல்வி கருத்தரங்கம் தொடங்கியது 29 நாடுகள் பங்கேற்பு


சென்னையில் 3 நாள் கல்வி கருத்தரங்கம் தொடங்கியது 29 நாடுகள் பங்கேற்பு
x

இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டையொட்டி முதல்கட்டமாக சென்னையில் 3 நாள் கல்வி கருத்தரங்கம் தொடங்கியது. இதில் 29 நாடுகள் பங்கேற்றுள்ளன.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி வளாகத்தில் முதலாவது ஜி20 கல்வி பணிக் குழுவின் 3 நாள் கருத்தரங்க கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த கருத்தரங்கில் ஜி20 அமைப்பில் உள்ள 20 நாடுகளுடன் மேலும் 9 நாடுகள் பங்கேற்றுள்ளன. யுனிசெப், யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புகளும் பங்கேற்றுள்ளன.

ஜி20 உறுப்பு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்கள், ஐ.ஐ.டி. மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொள்ளும் வகையில் கல்விசார் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இந்த கருத்தரங்கத்தில் ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட் உள்பட பல நாடுகளின் கல்வி அமைச்சகங்களின் அதிகாரிகள், மத்திய மற்றும் தமிழக அரசுத் துறைகள் பங்கேற்ற கண்காட்சி தொடங்கிவைக்கப்பட்டது. நேற்று தொடங்கிய இந்த கருத்தரங்கம் 2-ந் தேதி வரை நடைபெறும்.

தேசிய கல்வி கொள்கை

ஐ.ஐ.டி.யில் நேற்று நடந்த தொடக்க நிகழ்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி வரவேற்று பேசினார். அனைவருக்கும் தரமான, சமமான கல்வி வழங்க வேண்டும். இதன் மூலம் உலகில் உள்ள அனைத்து குழந்தைகளும் குறைந்தபட்சம் பட்டதாரியாக ஆவார்கள் என்ற உன்னத நோக்கம் இதில் உள்ளது என்று அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி பேசியதாவது:-

2023-ம் ஆண்டுக்கான ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பாகுபாடின்றி கிராமம், நகரம் என்று அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

நம் நாட்டில் படித்தவர்கள் அதிகம் இருந்தாலும் தொழில் நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கை இந்த இடைவெளியை குறைக்க உதவும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது நல்ல முன்னெடுப்புதான். ஆனால் அதை பாகுபாடின்றி கிராமம், நகரம் என்று அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரமாண்ட வரவேற்பு

ஜி20 கல்வி பணிக்குழுவின் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்க உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் 100-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்களை சென்னை கிண்டியில் உள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 100 மாணவர்கள், ஜி20 கருப்பொருளைக் கொண்ட பதாகைகைகளை ஏந்தி வரிசையாக நின்று வரவேற்றனர்.

வளாகத்திற்கு வந்த பிரதிநிதிகளுக்கு தமிழக பாரம்பரிய கலாசாரப்படி ஜி20 என்ற துண்டு அணிவித்து பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பிரதான வாசலில் 62 இசைக் குழுவைச் சேர்ந்தவர்கள் இருபுறமும் வரிசையாக நின்று வாத்தியங்களை இசைத்தனர்.

அந்த இசையை வெளிநாட்டு பிரதிநிதிகள் பிரமிப்புடன் கேட்டு ரசித்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில், தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 47 மொழிகளில் வரவேற்பு என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது.

வெளிநாட்டவர் உரை

நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய கருத்தரங்கம் பிற்பகல் 4.30 மணி வரை நீடித்தது. முதல் பிரிவு கருத்தரங்கத்தில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனுகூலமான மற்றும் சமமான கல்வி என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சஞ்சய்குமார், யுனிசெப் பிரதிநிதி மரியா, ஐக்கிய அரபு எமிரேட் கல்வித்துறை இயக்குநர் சமீரா, சவுதி அரேபியா உதவி துணை மந்திரி அப்துல்ரகுமான், ஆஸ்திரேலியாவின் கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சர் மாத்யூ ஜான்ஸ்டன் ஆகியோர் பேசினர்.

2-வது கருத்தரங்க கூட்டத்தில், தரமான உயர்கல்வி பற்றி விவாதிக்கப்பட்டது. அதில், என்.இ.டி.எப். தலைவர் அனில், துருக்கி பல்கலைக்கழக இயக்குநர் ஆரில் ஆல்டன், மொரிஷியஸ் கல்வித்துறை இயக்குநர் கிரம் புஜுன், தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சில் ஜனகா புஷ்பநாதன் (இங்கிலாந்து சார்பில்), தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, சீனா கல்வித்துறை அதிகாரி ஜுன் பாங்க் ஆகியோர் உரையாற்றினர்.

3-வது கூட்டத்தில், திறன் மேம்பாட்டு கல்வி செயலாளர் அதுல்குமார் திவாரி, நெதர்லாந்தின் மூத்த கொள்கை ஆலோசகர் அகன்க்ஷா சர்மா, சிங்கப்பூர் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் ஆரோன் லோ, பங்களாதேஷ் துணைத் தூதரக அதிகாரி ஷெல்லி ஆகியோர் உரையாற்றினர்.


Next Story