திருச்செங்கோடு அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; புதுப்பெண் உள்பட 3 பேர் பலி


திருச்செங்கோடு அருகே  கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; புதுப்பெண் உள்பட 3 பேர் பலி
x

திருச்செங்கோடு அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புதுப்பெண் உள்பட 3 பேர் பலியாகினர்.

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புதுப்பெண் உள்பட 3 பேர் பலியாகினர்.

கூலித்தொழிலாளர்கள்

திண்டுக்கல்லில் உள்ள பேகம்பூர் சின்னபள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் (வயது 35), சுப்பிரமணி (48). இவர்கள் அந்த பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். 2 பேருக்கும் திருமணமாகி விட்டது.

இந்த நிலையில் 2 பேரும் குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காக சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலில் கயிறு கட்டுவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சுரேஷ் ஓட்டினார். சுப்பிரமணி பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே புளியம்பட்டி சுரக்கா தோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

நேருக்கு நேர் மோதல்

அப்போது எதிரே ஒரு காரில் திருச்செங்கோடு நெய்யக்காரப்பட்டி சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (29), அவருடைய மனைவி ஜீவிதா (21) ஆகியோர் திருச்செங்கோடு கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர். அந்த சமயம் எதிர்பாராதவிதமாக கார்- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சுரேஷ், சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்திலேேய ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகினர். மேலும் காரில் இருந்த ஜீவிதா இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்து வலியால் துடித்தார். ராமகிருஷ்ணன் சிறுகாயத்துடன் தப்பினார். இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த ஜீவிதா, காயம் அடைந்த ராமகிருஷ்ணன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

ஆனால் செல்லும் வழியிலேயே ஜீவிதா பரிதாபமாக இறந்தார். ராமகிருஷ்ணனுக்கு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருச்செங்கோடு ஊரக போலீசார் பலியான சுரேஷ், சுப்பிரமணி ஆகியோரது உடல்களை கைப்பற்றி திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான ஜீவிதாவுக்கு, ராமகிருஷ்ணனுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் புதுப்பெண் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story