சேலம் சிறை பயன்பாட்டுக்கு 3 மின் சைக்கிள்


சேலம் சிறை பயன்பாட்டுக்கு 3 மின் சைக்கிள்
x

சேலம் சிறை பயன்பாட்டுக்கு 3 மின் சைக்கிள் வழங்கப்பட்டு உள்ளன.

சேலம்

சேலம் மத்திய சிறை

சேலம் மத்திய சிறை 16½ ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது சிறையில் 174 தண்டனை கைதிகள், 807 விசாரணை கைதிகள், 111 குண்டர் தடுப்பு காவல் கைதிகள் என மொத்தம் ஆயிரத்து 92 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் முதல் உதவி சிகிச்சை அளிப்பதற்காக சிறை டாக்டர்கள், நர்சுகள். கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள அறைக்கு நடந்து செல்ல காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

அதே போன்று சிறை முழுவதும் இரவு பகல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஜெயிலர் மற்றும் வார்டன்கள் வெகுதூரம் நடந்து செல்லவும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதே நிலை அனைத்து சிறைகளிலும் உள்ளதாக புகார்கள் வந்தது. இந்த குறைகளை போக்க சமீபத்தில் சென்னை புழல் சிறையில் மின்சார சைக்கிள் (இ-சைக்கிள்) அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், நேற்று சேலம் சிறையில் 3 மின்சார சைக்கிளை அறிமுகப்படுத்தினார்.

மின் சைக்கிள்

இது குறித்து சேலம் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வினோத்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

தற்போது வழங்கப்பட்டு உள்ள சைக்கிள்களில், ஒரு சைக்கிள் ஜெயிலருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஜெயிலர் சிறை முழுவதும் சைக்கிளில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார். மற்றொன்று சிறையில் மருத்துவ உதவியாளருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர் கைதிக்கு உடல் நிலை சரியில்லை என்றால் சம்பந்தப்பட்ட அறைக்கு விரைந்து சென்று மருந்து, மாத்திரை வழங்குவார்.

மற்றொன்று தலைமை வார்டனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர், இரவு- பகல் சைக்கிளில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார். அதன்படி தற்போது வழங்கப்பட்டு உள்ள 3 மின்சைக்கிள்கள், சேலம் சிறைக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்


Next Story