பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 3 பேர் கைது


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீசி பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகளின் கார், ஆட்டோக்களை சேதப்படுத்திய வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீசி பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகளின் கார், ஆட்டோக்களை சேதப்படுத்திய வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பழனியப்பா லே-அவுட்டை சேர்ந்த பா.ஜனதா அமைப்பு சாரா பிரிவு மாவட்ட செயலாளர் பொன்ராஜ் என்பவரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதே பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த பா.ஜனதா பிரமுகர் சிவக்குமாரின் கார் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, கண்ணாடிகளும் உடைக்கப்பட்டு கிடந்தன.

மேலும் எம்.ஜி.எம். நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வெள்ளிங்கிரி என்பவரின் சரக்கு வாகனம் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதற்கிடையில் குமரன் நகர் 2-வது லே-அவுட்டை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி சரவணக்குமாரின் 2 ஆட்டோக்களின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

3 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி நகர மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உத்தரவின் பேரில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோரது மேற்பார்வையில் பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு தீபா சுஜிதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் சம்பவம் தொடர்பாக பல்வேறு பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர். இந்தநிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

மேலும் சிலருக்கு தொடர்பு

பொள்ளாச்சியில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியது தொடர்பாக மேற்கு போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய 7 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள சுமார் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட நபர்களின் செல்போன் எண்களையும் ஆய்வு செய்தனர்.

இதற்கிடையில் சந்தேக நபர்களை தொடர்ந்து கண்காணித்து விசாரணை நடத்தியதில் பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோட்டை சேர்ந்த முகமது ரபீக் (வயது 26), சூளேஸ்வரன்பட்டி மகாத்மா காந்தி வீதியை சேர்ந்த ரமீஸ் ராஜா (36), செரீப் காலனி சாதிக் பாட்சா (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் கைதான முகமது ரபீக் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் பொள்ளாச்சி பகுதி தலைவராகவும், ரமீஸ் ராஜா, சாதிக் பாட்சா ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக உள்ளனர்.

விசாரணையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

காவலில் வைக்க உத்தரவு

கைதான 3 பேரையும் பொள்ளாச்சி ஜே.எம். 1 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் மாஜிஸ்திரேட்டு சுவேதாராயன் 3 பேரையும் வருகிற 30-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் 3 பேரையும் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையில் கைதான முகமது ரபீக், ரமீஸ் ராஜா, சாதிக் பாட்சா ஆகியோர் பொய் வழக்கு போடாதே என்று கோர்ட்டு வளாகத்தில் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதையொட்டி துப்பாக்கி ஏந்திய அதிவிரைவுப்படை போலீசார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

---------------

(குறிப்பு: ஆடு மற்றும் படம் சேர்க்கப்பட்டுள்ளது)


Next Story