உண்ணாவிரதம் இருந்த 3 தொழிலாளர்களுக்கு மயக்கம்


உண்ணாவிரதம் இருந்த 3 தொழிலாளர்களுக்கு மயக்கம்
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் 19-வது நாளாக நீடித்தது. இதில் உண்ணாவிரதம் இருந்த 3 தொழிலாளர்கள் திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர்

நெய்வேலி,

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றும் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பாரத பிரதமர் அறிவித்த ரோஸ்கர் மேளா திட்டத்தின் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரம் செய்யும் வரை குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி.ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் நெய்வேலி தலைமை அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அங்கு போராட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணா திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 19-வது நாளாக நீடித்தது.

மயங்கி விழுந்த 3 பேர்

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்த உண்ணாவிரத போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.

இதில் என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களான செல்வம், ஜோசப்ராஜ், அறிவழகன் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து திடீரென மயங்கி விழுந்தனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story