3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று: ஆன்லைன் வழக்கு விசாரணையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - வக்கீல்களுக்கு, ஐகோர்ட்டு அறிவுரை


3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று: ஆன்லைன் வழக்கு விசாரணையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - வக்கீல்களுக்கு, ஐகோர்ட்டு அறிவுரை
x

வாதம் செய்யும் வக்கீல்களை தவிர மற்றவர்கள் கோர்ட்டு அறைக்குள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விதிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும்

சென்னை,

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள கோர்ட்டுகளுக்கு வரும் வக்கீல்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என்று அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், முக கவசம் அணியாமல் கோர்ட்டு வளாகத்துக்குள் பலர் வருகின்றனர். இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் வக்கீல்கள் பலர் ஆஜராகி இருந்தனர். அதில், பலர் முக கவசம் அணியாமல் இருந்தனர்

இதையடுத்து நீதிபதிகள், ''கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டுதான் ஆன்லைன் விசாரணையையும் அமலுக்கு கொண்டு வந்துள்ளோம். அந்த வசதியை வக்கீல்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நேரில் வருவதை தவிர்க்க வேண்டும். ஏன் இத்தனை வக்கீல்கள் வந்துள்ளீர்கள்?.

ஏற்கனவே, 3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, வாதம் செய்யும் வக்கீல்களை தவிர மற்றவர்கள் கோர்ட்டு அறைக்குள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விதிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும்'' என்று அறிவுரை வழங்கினர்.


Next Story