பயிற்சி டாக்டர் உள்பட 3 பேர் பலி


பயிற்சி டாக்டர் உள்பட 3 பேர் பலி
x

பயிற்சி டாக்டர் உள்பட 3 பேர் பலி

கோயம்புத்தூர்

போத்தனூர்

கோவை அருகே அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் பயிற்சி டாக்டர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

பயிற்சி டாக்டர்

கோவை மதுக்கரை ராம்பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் ராமசிகாபதி (வயது 54) தொழிலதிபர். இவரது மகள் ராமசிவானி (22). இவர் கோவை கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ராமசிவானி நேற்று வழக்கம் போல மதியம் வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு தனது காரில் சென்றுள்ளார். அப்போது கார் மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலை சந்திப்பு அருகே வந்த போது, எதிரே வந்த டேங்கர் லாரி, ராமசிவானி வந்த கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இது பற்றி தகவல் அறிந்து வந்த மதுக்கரை போலீசார் காரில் இருந்த ராமசிவானி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் தில்லையரசன் (44) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர் உள்பட 2பேர் பலி

இதுபோல் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் ராம்விஷாக் (22). இவர் கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ மெக்கானிக்கல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ராம்விஷாக் தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் மாரியுடன் (20) பொள்ளாச்சி சென்றார். பின்னர் அவர்கள் பொள்ளாச்சியில் இருந்து ஒத்தக்கால்மண்டபத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் மயிலேரிபாளையம் அருகே வந்த போது சாலையில் கொட்டி வைத்திருந்த மண் மீது மோட்டார் சைக்கிள் ஏறி கட்டுப்பாட்டை இழந்தது. மேலும் மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த உடுமலைபேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஞானவேல் (23), மற்றும் உடன் ஊழியரான ரவிக்குமார் ஆகியோர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஞானவேல் சம்பவ இடத்தில் உயிர் இழந்தார்.

படுகாயமடைந்த மாணவர் ராம்விஷாக், ரவிகுமார் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியில் ராம்விஷாக் பரிதாபமாக உயிரிழந்தார். ரவிகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்குப்பதிவு

போலீஸ் விசாரணையில் மயிலேரிபாளையம் அருகே குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சாலை ஓரத்தில் குடிநீர் குழாயை சீரமைக்க குழியை தோண்டி அந்த மண்ணை நெடுஞ்சாலையிலேயே கொட்டியுள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலையில் இந்த பணிகள் நடந்து வந்த நிலையில். குழாய் பணிகள் நடைபெறும் பகுதியில் செல்போன் கேபிள்கள் செல்கின்றன. இதனை கண்காணிக்கும் பணியில் தனியார் செல்போன் அந்நிறுவனத்தின் ஊழியரான உடுமலைபேட்டையை சேர்ந்த ஞானவேல் (23) என்பவர் சக பணியாளரான ரவிகுமார், விஜயகுமார், லிங்குசாமி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ராம்விஷாக் இரு சக்கர வாகனத்தில் வந்த போது சாலையில் இருந்த மண் மீது ஏறியதில் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அலட்சியமாக செயல்பட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் அன்பு, மற்றும் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story