மகளிர் உரிமை தொகை பெற 3 லட்சம் பெண்கள் விண்ணப்பம்
மகளிர் உரிமை தொகை பெற 3 லட்சம் பெண்கள் விண்ணப்பம்
கோவை
கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை கோரி இதுவரை 3 லட்சம் பெண்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார். இந்த திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 43 ஆயிரத்து 875 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன்கார்டுதாரர்களுக்கு 1,401 ரேஷன் கடைகள் மூலமாக பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 839 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட மகளிருக்கான உரிமைத்தொகை பதிவு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
3 லட்சம் பேர் விண்ணப்பம்
இதனை தொடர்ந்து ரேஷன்கடை ஊழியர்கள் மூலமாக வீடு, வீடாக சென்று மகளிருக்கு விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் வழங்கப்பட்டது. அந்த டோக்கனில் முகாம் நடைபெறும் இடம், எந்த தேதியில், எந்த நேரத்தில் முகாமிற்கு வர வேண்டும் என்பது குறிப்பிட பட்டு இருந்தது. இதையடுத்து கடந்த 24-ந் தேதி முதல் டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தின் படி பெண்கள் அந்தந்த முகாமிற்கு சென்று தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து வந்தனர்.
பெண்கள் தங்களது ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வங்கி கணக்கு எண், மின் கட்டண ரசீது ஆகியவற்றை எடுத்து சென்றனர். ஒரு முகாமில் ஒரு நாளைக்கு 80 பேரின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 24-ந் தேதி தொடங்கிய இந்த முகாமில் இதுவரை 3 லட்சம் பெண்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவையில் முதற்கட்டமாக 839 இடங்களில் மகளிர் உரிமைத்தொகை பதிவு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமானது வருகிற 4-ந் தேதி வரை நடைபெறும். தற்போது வரை இந்த முகாமில் 3 லட்சம் பெண்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து உள்ளனர். இதையடுத்து 2-ம் கட்டமாக 562 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட பெண்களுக்கான விண்ணப்பதிவு முகாம் வருகிற 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறும். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் வினியோகம் விரைவில் தொடங்கப்படும். ரேஷன்கடை ஊழியர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரிடையாக சென்று வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.